சிங்கம், சிங்கம்-2 என்று வசூல் வேட்டை நடத்திவிட்டு சூர்யா அடுத்த அதிரடிக்கு ரெடியான திரைப்படம் தான் அஞ்சான். இயக்குனர் லிங்குசாமியின் ஹை ஸ்பீட் திரைகதையை நம்பி சூர்யா மறுபடியும் வசூல் வேட்டையாட அஞ்சானாக மாறியிருக்கிறார்.தமிழ் சினிமாவிற்கு என சில தத்துவங்கள் இருக்கிறது, அதை இந்த படமும் பின்பற்றி டான் கதையை கையில் எடுத்தது மட்டுமில்லாமல், வழக்கம் போல் அதை மும்பையில் எடுத்துள்ளார்கள். சமீப காலமாக மாஸ் ஹீரோக்களின் படங்கள் எல்லாம் மும்பையை சுற்றி தான் எடுக்கவேண்டும் போல, மங்காத்தா, துப்பாக்கி படத்தின் விளைவு தான் இது.படத்தின் கதையாக பார்த்தோமேயானால் லிங்குசாமி சொன்னது போல் பாட்ஷா படத்தின் டெக்னாலஜி டெவலப்மெண்ட் தான் இந்த அஞ்சான். ராஜு பாய் தம்பி கிருஷணா தன் அண்ணனை தேடிக்கொண்டு மும்பை வர, அங்கு கரீம் பாயிடம் தன் அண்ணனை பற்றிய உண்மைகளை கேட்டு அறிகிறார். ராஜு பாய், சந்துரு இருவரும் பாட்ஷா, மாணிக்கம் டைப் நண்பர்கள். இவர்கள் இணைந்து மும்பையில் நடக்கும் அனைத்து கட்டபஞ்சாயத்துகளிலும் முதல் ஆளாக தலையிட்டு முடிக்கின்றனர். இதில் சில சந்தர்ப சூழ்நிலையால் சமந்தாவை, சூர்யா கடத்த பின் வழக்கம் போல் காதலில் முடிகிறது.நல்ல டான் இருக்கும் போது கெட்ட டான் வேண்டும் அல்லவா? அதேபோல் இம்ரான் என்பவர் மற்றொரு டான், இவர் ஒரு கட்டத்தில் சந்துருவை(வித்யூ) கொல்ல, அதை பார்க்க வந்த இடத்தில் சூர்யாவையும் சுட்டு தள்ள, அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் மீதிக்கதை. நடிப்பு குறித்து சொல்லவேண்டுமென்றால் சமந்தா வேறு எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார், சண்டைக்கோழி படத்தில் வரும் மீராஜாஸ்மின் போன்று துறு துறு என வந்து ரசிகர்களை கவர்கிறார். சூரி சில நிமிடம் வந்தாலும் செம்ம கலாட்டா செய்துவிட்டு போகிறார்.படத்தின் பலம் கண்டிப்பாக சூர்யா தான், ராஜு பாயாக கலக்குகிறார், சண்டைபோடுகிறார், அதே நிமிடம் சமந்தாவுடன் டூயட் பாடி அசத்துகிறார். சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவு, நாங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை, ஒவ்வொரு காட்சியையும் கலர்ஃபுல்லாக படம் பிடித்தது மட்டுமில்லாமல் படத்திற்கு டான் கோட்டிங் கொடுத்துள்ளார்.யுவனின் பாடல்கள் ’பேங் பேங்’, ஏக் தோன் தீன் பாடல்கள் மட்டும் கேட்கலாம், ஆனால் பின்னணி இசையில் கலக்கி எடுத்திருக்கிறார். பலவீனம் கண்டிப்பாக படத்தின் நீளம் தான், இன்றைய சூழ்நிலையில் மக்கள் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்க, 2 மணி நேரமே அதிகம் போல் தெரிய, 2.45 மணி நேரத்திற்கு மேல் படம் ஓடுவது தேவை தான? படம் வழக்கமான டான் கதை, யூகிக்க கூடிய திருப்பங்கள் என செல்கிறது.மொத்தத்தில் அஞ்சான் மும்மை டான் கதையை எடுக்க கொஞ்சம் அஞ்ச வைத்துவிட்டான்.